Translate This Page
கி.பி 1884 -ம் ஆண்டு, கள்ளிகுளம் கிராம மக்களும் மற்றும் இயேசு சபை குருக்களும் இணைந்து அன்னை மரியாளுக்காக ஒரு பேராலயம் கட்ட முடிவு செய்தனர். பேராலயத்தை எந்த இடத்தில் அமைப்பது என்பதில் குழப்பமுற்றிருந்தனர். அந்த நேரத்தில் அன்னை மரியாள், ஊர் பெரியவர்களின் கனவில் தோன்றி ஆலயம் கட்ட இடத்தை அறிவுறுத்தினார். மறுதினம் ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி தாங்கள் கண்ட கனவைப் பற்றி கலந்தாலோசித்து, அதனை பங்கு தந்தையிடம் தெரிவித்தனர். பங்கு தந்தை இது அன்னை மரியாளின் திருச்செயல் என்பதை எளிதாக புரிந்து கொண்டார். அவர்கள் ஊர் மக்களை அழைத்துக் கொண்டு அன்னை மரியாள் அறிவுறுத்திய இடத்திற்கு சென்றனர். அங்கே, அந்த கோடை காலத்தில், ஆலய எல்லையை வகுத்து பனி பொழிந்திருப்பதை கண்டனர். இதுதான் இத்திருத்தலத்தில் நடந்த முதல் அதிசயம் ஆகும். கி.பி 1886 - ம் ஆண்டு, அழகிய பேராலயம் ஒன்று இந்த இடத்தில் அமைக்கப் பட்டு, அதிசய பனிமாதாவுக்கு அற்பணிக்கப் பட்டது.
கி.பி 1939 -ம் ஆண்டு மார்ச் மாதம் 29 -ம் நாள், மாலை 6.30 மணியளவில், அன்னை மரியாள் பேராலயத்தின் அருகிலுள்ள மலை குன்றில் தோன்றி ஊரை ஆசிர்வதித்தார். அன்னை மரியாள், பிரகாசமான ஒளியின் நடுவில் தோன்றினார். ஆறு சிறுவர்கள் (ஞான ஆதிக்கம், எஸ்.பி.ஜாண், எம்.ஜி.தாமஸ், டி.தாசன், ஆர்.தாசன், எம்.எ.தாசன்) இத்திருக்காட்சியை கண்டனர். அவர்கள் தாங்கள் கண்ட திருக்காட்சியை ஊர் மக்களிடமும் பங்குத் தந்தை மரியானூஸ் அடிகளாரிடமும் எடுத்துக் கூறினர். பங்குத் தந்தையும், ஊர் மக்களும் அச்சிறுவர்கள் கூற்றை நம்புவதா அல்லது மறுப்பதா என குழப்பமுற்றனர். இத்திருக்காட்சியை ஒரு இயற்கை அடையாளத்தின் மூலமாக உறுதி செய்யுமாறு அன்னையிடம் மன்றாடினர். மறு நாள், அந்த கோடை காலத்தில், மழை மறைவு பகுதியான கள்ளிகுளம், பெரும் மழையைக் கண்டது. இவ்வாறு, அன்னை மரியாள் தன் திருக்காட்சியையும், தன் திருபிரசன்னத்தையும் இத்திருத்தலத்தில் உறுதி செய்தார்.
அந் நாளிலிருந்து, ஆயிரக் கணக்கான மக்கள் இத்திருத்தலதை நாடி வந்து அன்னையின் அருள் பெற்று செல்கின்றனர். இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து, கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிற மதத்தினறும் இங்கு வந்து அன்னையின் அருள் ஆசியை பெற்றுச் செல்கின்றனர். எண்ணிலா அற்புதங்களும், அருஞ்செயல்களும் ஒவ்வொரு வருடமும் இங்கு நடந்தேறி வருகின்றன. நூற்றாண்டு காலமாக வழங்கி வரும் அதிசய பனிமாதா பக்தி, இத் தலத்தை திருத்தலமாக உறுதி செய்கிறது.
தமிழ் கலாச்சாரத்தில் இழைந்த இத்திருத்தலமானது பக்தர்களை வரவேற்பதிலும், சமய பற்றை பேணுவதிலும் ஒரு சிறந்த தலமாக விழங்கி வருகிறது.